Monday, December 14, 2009

படித்ததில் பிடித்தது

மை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.

புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவரான Chindli Fosterன் சமீபத்திய நாவல் "மை லிட்டில் ஏலியன் பிரண்ட்". நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய
"Sleeping with an alien"
ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த புதிய நாவல் வெளிவருகின்ற தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்கா மற்றுமின்றி உலகம் முழுவதும் வாசகர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடந்தனர்.
நேற்று மாலை நான்கு மணிக்கு வெளியிடப்பட்டது. இணையத்தில் பதிவு செய்து வைத்திருந்ததால் பதிவு எண்ணை சொல்லி நான்கு முப்பதுக்கு வாங்கிவிட்டேன். மொத்தம் 400 பக்கங்கள். அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து முதல் பத்து பக்கங்கள் வாசித்திருப்பேன். அதற்கு மேலும் தொடர்ந்து வாசித்தால் இரவு முழுவதும் பூங்காவில்தான் இருக்கவேண்டும் என்பதால் உடனே வீட்டிற்கு வந்து வாசிக்க ஆரம்பித்தேன். இன்று காலை ஏழு மணிக்கு வாசித்து முடிக்கும்போது மனதெங்கும் வியாபித்திருந்தார்கள் "கேனோ"வும் "ஜூலி"யும்.

ஏழுவயது சிறுமி ஜூலியின் தாய் ஒரு கார் விபத்தில் இறந்துவிடுகிறாள். ஜூலியின் அப்பா வில்லியம்ஸ் ஒரு கிராமத்தில் தன் மகளுடன் வசித்து வருகிறார். அது ஒரு பண்ணை வீடு. வீட்டைச் சுற்றிலும் பச்சைப்பசேல் என புல்வெளி. அதில் மேய்ந்துகொண்டிருக்கும் சில குதிரைகள். பெரிய வீட்டில் தன் அப்பாவுடன் வசிக்கும் ஜூலிக்கு சிறுவயது முதலே எதிலும் பயம் கிடையாது. வில்லியம்ஸ் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க தூரத்திலிருக்கும் சந்தைக்கு சென்றுவிடும் போதெல்லாம் தனியாக இருப்பாள் ஜூலி. அவர்கள் வளர்க்கும் குதிரைகளும்,பசுமாடுகளும் மெல்லியதாய் ஒலியெழுப்பிக்கொண்டிருக்கும். ஜூலியின் வீட்டின் அருகில் வேறு வீடுகள் கிடையாது.ஜூலியுடன் விளையாட ஒரு லேப்ரடார் நாய்க்குட்டியை வாங்கித் தருகிறார் வில்லியம்ஸ். தங்க நிறத்தில் புசுபுசுவென்ற ரோமத்துடன் மென்மையான அந்த குட்டியைக் கண்டவுடன் ஜூலிக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதற்கு மைலோ என்று பெயரிடுகிறாள். தன் படுக்கை அறையில் அதற்கென்று ஒரு இடம் ஒதுக்கித்தருகிறாள்.அவளது உலகமே அந்த சிறுநாய்க்குட்டியுடன் என்றாகிறது. சில மாதங்களில் மைலோ நன்றாக வளர்ந்து,ஜூலி சொல்கிறபடியெல்லாம் கேட்கிறது. ஜூலி மைலோவை தன் தம்பியாகவே நினைத்துருகுகிறாள்.

இந்த நிலையில் ஒரு நாள் நள்ளிரவு மைலோவைக் காணாமல் ஜூலியும் வில்லியம்ஸும் தேடுகிறார்கள். எங்கு தேடியும் மைலோவைக் காணவில்லை. அழுது அழுது ஜூலியின் கண்கள் வீங்கி,கன்னம் சிவந்துவிடுகிறது.அழுதுகொண்டே உறங்கி விடுகிறாள். அதிகாலையில் மைலோவின் சத்தம் சன்னமாக கேட்கிறது. ஜன்னல் வழியே பார்க்கிறாள் ஜூலி. தோட்டத்தில் மைலோ மயங்கிய நிலையில் கிடக்கிறது. மைலோவின் தலையிலிருந்து வழிந்து கொண்டிருக்கிறது ரத்தம். ஓடிச்சென்று மைலோவை தூக்க முயற்சிக்கிறாள்,வளர்ந்துவிட்டதால் மைலோவை தூக்க முடியவில்லை.அப்போது ஒரு கரம் மைலோவை தூக்க நீள்கிறது. ஜூலியின் வயதை ஒத்த சிறுவனொருவன் நிற்கிறான். இந்த நேரத்தில் எங்கிருந்து இவன் வந்தான் என்று ஜூலிக்கு ஆச்சர்யம் தாளவில்லை. நீயாரென்று கேட்கிறாள். அவன் பதிலேதும் சொல்லாமல் மைலோவை வெகு சுலபமாக தூக்கி கொண்டு ஜூலியின் அறைக்கு வருகிறான்.

மைலோவிற்கு முதலுதவி செய்துவிட்டு அந்த சிறுவனிடம் வந்து பேசுகிறாள் ஜூலி. எந்தவொரு கேள்விக்கும்
அவன் பதிலிடவில்லை.ஜூலியின் படுக்கையில் படுத்துறங்கிவிடுகிறான்.மறுநாள் தன் அப்பாவின் அறைக்கு சென்று அந்த சிறுவன் பற்றி சொல்கிறாள். வில்லியம்ஸ் ஜூலியின் அறைக்குள் வந்து பார்க்கும்போது அவனைக் காணவில்லை. அவன் ஜூலியின் படுக்கையில் அமர்ந்து அவளை பார்த்து சிரிக்கிறான். அப்போதுதான் ஜூலிக்கு புரிகிறது அவன் தன் கண்களுக்கு மட்டுமே தெரிகிறானென்று. நீ ஏதோ கனவு கண்டிருக்கிறாய் போய் விளையாடு என்று சொல்லிவிட்டு வில்லியம்ஸ் சந்தைக்கு போய்விடுகிறார். இரண்டு நாட்கள் கழித்துதான் வருவதாகவும் சொல்கிறார்.

அந்த சிறுவனுக்கு தான் உண்ணும் ரொட்டியும் பாலும் கொடுக்கிறாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் உண்டுமுடிக்கிறான்.சைகையால் இன்னும் உணவு வேண்டும் என்கிறான். தன் அப்பாவின் உணவை போல் நான்கு மடங்கு சாப்பிடுகின்ற அவனை பார்த்து ஆச்சரியப்படுகிறாள். அவனுக்கு கேனோ என்று பெயரிடுகிறாள்.
மைலோ அவனைக் காணும்போதெல்லாம் குரைக்கிறது. கேனோவும் ஜூலியும் விளையாடுகிறார்கள். கேனோவைக் கண்டு குரைத்தபடியே இருக்கிறது மைலோ.

இரண்டாவது அத்தியாயம் ஜூலியின் கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கிறது.ஜூலி பதினெட்டு வயது யுவதியாக மாறி இருக்கிறாள்.தங்க நிறத்தில் கூந்தலும்,நீல நிறக் கண்களும் அவளது அழகை மேலும் அழகாக்கி இருக்கிறது. செர்ரி பழ நிறத்தில் அவள் இதழ்களை கண்டு கல்லூரியே கிறங்கிக் கிடக்கிறது.ஜூலியின் வகுப்புத்தோழன் கெவின் அவளிடம் தன் காதலை சொல்கிறான். ஜூலிக்கும் அவனை பிடித்துப்போகிறது. அடுத்த வருடத்திலிருந்து இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் என்றும் அதுவரை காதலர்களாக பழகலாமென்றும் முடிவெடுக்கிறார்கள். தன் வீட்டிற்கு செமஸ்டர் விடுமுறைக்காக செல்கிறாள் ஜூலி. விமான நிலையத்தில் கண்ணீர் மல்க வழியனுப்புகிறான் கெவின். விடுமுறைக்காக சென்றவளிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லாத காரணத்தால் அவள் கிராமத்து வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறான் கெவின்.

வீட்டின் கேட்டை திறந்துகொண்டு கெவின் உள்நுழைகிறான்.அங்கே அவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெரிய வீட்டில் தனியாக பேசிக்கொண்டிருக்கிறாள் ஜூலி. யாரிடம் பேசுகிறாள் என்று மறைந்திருந்து பார்க்கிறான் கெவின். யாருமில்லை அங்கே. ஆனால் ஜூலி ஒரு குழந்தைபோல் பேசிச் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். ஏதோ மனதில் தோன்ற தன்னிடமிருக்கும் விலையுயர்ந்த கேமராவால் ரகசியமாக அவளை படம் பிடித்துவிடுகிறான். அந்த படத்தில் ஜூலிக்கு அருகில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறான். விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் வந்து அமர்கிறான். மனம் படபடத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிறுவன் ஏலியன் என்பதை உணர்ந்துகொள்கிறான். ஏலியனை அரசாங்கத்திடம் பிடித்துக்கொடுத்தால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்று தோன்ற,அந்த சிறுவனை பிடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். ஜூலியின் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு வீட்டை நோக்கி ஓடுகிறான். அங்கே என்ன நடக்கிறது என்பதை நாவலின் கடைசி இருபது பக்கங்களில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சிண்டலி ப்ராஸ்டரின் எழுத்தும்,விவரணைகளும் நாவலுக்கு மிகப்பெரிய பலம்.ஜுலியின் அம்மா கார் விபத்தில் இறந்து போயிருக்கிறாள் என்பதை கார் சத்தம் கேட்கும்போதெல்லாம் தன்னையும் அறியாமல் ஜூலி காதைப்பொத்திக்கொள்வதாக காட்சிப்படுத்தி இருப்பார். இதுபோன்ற மிகவும் நுட்பமான வெளிப்பாடு நாவலுக்கு மிகப்பெரிய பலம். கேனோவும் ஜூலியும் அப்பா சந்தைக்கு போன இருநாட்களும் விளையாடுவதை நாற்பது பக்கங்கள் விவரித்திருக்கிறார்.வாசிக்கும் வாசகனுக்கு சிறிதும் சலிப்பைத்தராமல்,வாசகனை குழந்தை பருவத்திற்கே இழுத்து செல்லும் வித்தை இவரின் எழுத்துக்களில் மிளிர்கிறது. சிறுமி ஜூலி கேனோவிற்கு உணவு பரிமாறும் சமயத்தில் சுவற்றில் தொங்குகின்ற அவளது அம்மாவின் புகைப்படம் மெல்லியதாய் புன்னகை செய்தது போலிருந்தது என்கிற வரியின் கவித்துவம் மனதை அள்ளிப்போகிறது.

எதற்காக கேனோ பூமிக்கு வந்தான்,ஜூலிக்கு என்னவாயிற்று,மைலோவின் தலையில் ஏன் அடிபட்டது,அப்பா வில்லியம்ஸ் என்ன ஆனார் என்பதை கடைசி இருபது பக்கங்களில் வாசிக்கும்போது நம்மை பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டுபோய்விடுகிறார் சிண்ட்லி. சலிப்புத்தட்டாத விவரணைகளும்,சொற்களினூடாக காட்சிப்படுத்துதலிலும் தனித்து நிற்கிறது இந்நாவல்.கேனோ சிரித்தால் வாசகனுக்கும் சிரிப்பு வருகிறது. ஜூலி அழுதால் வாசகனும் சேர்ந்து அழுகிறான்.நாவலின் கடைசி இருவரி இப்படி முடிகிறது.
"Julie's eyes were filled with tears. Her lips were whispering something which he can only understand"

விலை: 11.99$
வெளியீடு: Harper Kollins Publications

நூல் விமர்சனத்தை எழுதி முடித்தவுடன் சந்தோசத்தில் துள்ளினேன். இன்னும் ஐம்பது வருடம் கழித்து வரவிருக்கும் ஒரு நாவலை,நாவல் ஆசிரியர் பிறப்பதற்கு முன்பே நாவலுக்கு விமர்சனம் எழுதிய முதல்
மனிதன் என்கிற பெயரும் புகழும் கிடைக்கப்போவதை நினைத்து சத்தமிட்டு சிரித்தேன். அருகிலிருந்த என்
கால இயந்திரம் சிவப்பு கண்களால் என்னைப் பார்த்து கண்ணடித்தது.

 நிலா ரசிகன்.!
http://www.nilaraseeganonline.com/2009_05_01_archive.html