Saturday, September 1, 2012

இலையில் தங்கிய துளிகள்

கால பெருவெளியில் சில பத்துஆண்டுகள்


கரைந்து கழிந்த பின் மீண்டும்

கண்டு செல்ல வருகிறேன் உன்

காதல் திருமுகத்தைஅவ்வண்ணமே பொழியுமாம் பூ

மலிந்த பொன்முகம்

உன் கிராமம் நெருங்க நெருங்க

மார்பு கூட்டில் உயிர் நோகுதடிநகரா மரங்கள் நகர்வதாகவும்

நகரும் வாகனம் நிலைகொண்டதாகவும்

நீள போய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம் கட்டி ஆடுகின்றன நிறைவேறாத கனவுகள்!!பட்டு பாவாடையின் காற்றடிப்போடு

பணிவில் திமிர் காட்டும் பார்வைகளோடு

முளைத்தும் முளையா முன்மலர்களை

சண்டையிட்டு முட்டும் சடை ஒதுக்கி,

சலங்கை கட்டிய மான்குட்டியாய்

கலர் தோயாத கலை மேகமாய்

வீதிமரங்களின் பூக்களை திறந்து

ஒட்டுமொத்த நாணத்தை உருண்டை திரட்டி

என்மேல் எறிந்து நீ என்னை கடந்த காலம்

மனசெல்லாம் மார்கழி தான்

தெருவெல்லாம் கார்த்திகை தான்!ஏலோ எட்டோ இருக்குமா! பழகி

வந்த ஆண்டுகளும் பகிர்ந்து கொண்ட

வார்த்தைகளும்!இன்றேனும் பேசு பெண்ணே

வாங்க !!!!

ஆண்டுகள் தோண்டிய அதே குரல்!

ஆனால் நீ மட்டும் நீ இல்லை :((

வீதி எல்லாம் விசிறி அடித்த அவள் எங்கே?

மழை ஊறிய ஓவியமாய் சாயம் போன நீ எங்கே?

காலம் தன் சவுக்கை பூக்கள்

மீது சொடுக்கமாலிருக்கலாம் !

மீண்டும் வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்

நீயும் நானும்பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது

உன் அம்மாவின் மரணம் :(

சரத்தின் சருகு சொல்லியது

உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்க தெரியாமல்

பாவமாய் உன் இரு பிள்ளைகள்!தேநீர் தந்தாய்! பட்டு விடக்கூடாதென்ற

உன் அச்சத்திலும் தொட்டு விட கூடாதென்ற

என் நடுக்கத்திலும் சிக்கிய கோப்பை

சிறிதே தள்ளாடியது !!!!மௌனம் திரட்டி பழங்கதை பேசி

வெள்ளை அடிக்காத சுவரில் பல்லி பார்த்து

ஓரகண்களால் உயிர் தடவி

இனிமேலும் இங்கிருப்பின் கண்ணீரோடு

உண்மைகளும் கொட்டிவிடும் என்றஞ்சி

கும்பிட்டு வெளியேறி கடைசி

விடை சொல்ல ஜன்னல் கம்பிகளில்

உன்கண்கள் தேடிய போது

கார் கதவு சாத்த வந்த உன் கணவன்

சொன்னான்

நீங்களே அவளுக்கு தாலி கட்டியிருக்கலாம்உன் போல் பெண்மக்கள் ஊர் உலகில் எத்தனையோ

காதலுற்ற சேதியினை காதலர்க்கு சொல்லாமல்

கணவருக்கு சொன்னவர்கள்

Monday, March 5, 2012

அரவான் எனது பார்வையில்                 இதுவரை எந்த படத்திற்கும் விமர்சனம் எழுதவேண்டும் என்ற என்னத்தை உண்டாக்காத தமிழ் படங்கள்,அரவான் பார்த்ததும் அந்த எண்ணத்தை உடைத்தெறிந்து இதோ இப்பொழுது டைப்பி கொண்டிருக்கிறேன்.
வசந்த பாலனின் முதல் படமான "ஆல்பம்" படத்தை நான் பார்க்கவில்லை.இரண்டாவது படமான "வெயில்"ன் தாக்கம் இரண்டு மூன்று நாட்களாக என் தூக்கத்தில் கூட விடாமல் தகித்தது.அடுத்த படமான "அங்காடி தெரு" வை பற்றி தனியாக எழுத தேவையே இல்லை.சமுதாயத்தின் பார்வையில் கீழ்மட்ட மனிதர்களாக பார்க்கப்படும் அடித்தட்டு மனிதர்களின் வாழ்கையை கண்ணாடி போன்று கண் முன் நிறுத்திய யதார்த்தமான பதிவு.இந்த வரிசையில் என் இதய சிம்மாசனத்தில் பாலாவிற்கு சரி சமாக வசந்தபாலனும் அமர்ந்தார்.
                     அந்த வகையில் அரவான் பட அறிவிப்பு வெளிவந்த சமயம் முதலே ஆவலை கிளப்பி கொண்டிருந்த அரவானின் டீசர் பார்த்த உடன் முதலில் தோன்றியது கதையின் நாயகன் "ஆதி" கதாநாயகியுடன் சரசமாடிய காட்சிகளை கண்ட போது கொடுத்த வாய்த்த மனிதர் என்ற என் எண்ணத்தை படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சுக்கு நூறாக உடைத்தார்.இளம் கதாநாயகர்கள் மத்தியில் இவரின் உழைப்பும்,அர்பணிப்பும் பிரம்பிப்புட்டுகின்றன.ஒரு ரசிகனின் வேண்டுகோள் தயவு செய்து அய்யனார் போன்ற மொண்ணை படங்களில் நடிக்க வேண்டாம் என்பதே.
                         பசுபதியை பற்றி தனியாக பாராட்ட வேண்டியதே இல்லை.படத்தின் இரண்டாவது நாயகன் இவர் தான்.தமிழ் சினிமாவின் நல்ல காலம் பிரகாஸ்ராஜ் என்ற நல்ல நடிகரை வில்லன் நடிகர் என்று முத்திரை குத்தியது போல், இவருக்கென்று ஒரு இமேஜ் வட்டதிற்குள் சிக்க வைக்காமல்   இவரை சுதந்திரமாக உலவ விட்டிருப்பது தான்.அவரின் பொருளாதார வாழ்க்கை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இவர் இப்படியே தொடர்வார் என் எதிர்பார்க்கிறேன்.

இனி படத்தை பற்றி :

                             அரவானின் முதல் பாதி ரயில் எஞ்சின் போல,போகும் இடம் சேர [கிளைமாக்ஸ்] பயன்பட்டு இருக்கிறது.இருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் போக்குவரத்து கால்நடையாகவே குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தகவல் பரிமாறுதல்,பண்டமாற்று முறை போன்றவற்றை படித்த நமக்கு திரை வடிவம் நிச்சயம் சுவாரசியமே.நா.முத்துகுமார் அவர்களின் பாடல் வரிகளும்,ஒளிபதிவாளர்ரும் கலக்கி இருக்கார்.

                             இரண்டாம் பாதி அபாரம்.அதிலும் இறுதி முப்பது நிமிடங்களில் மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஆதியின் நடிப்பு,மனிதர் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்.ஆதியை பார்க்கும் போது என் தமிழ் சகோதரர்கள் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் இருபது வருடங்களுக்கு மேலாக மரணத்தை எதிர் நோக்கும் கொடுமையை உணர முடிந்தது.பதினெட்டாம் நூற்றாண்டின் வழக்கப்படி முப்பது முடிச்சு போட்ட கயிறை பார்க்கும் போது, என் சகோதரகளுக்கு கணக்கில் வராத எத்தனை முடிச்சு என்பது பெரிய கேள்விகுறி யாக வளைந்து நம் முன் நிற்கிறது.

                           படக்குழுவினர் அனைவரின் உழைப்புக்கும் மனதார வாழ்த்துகளும் பாராட்டுக்களும். அப்படியே பொன்னியின் செல்வன் போன்ற தலையணை நாவல்களையும் திரை வடிவம் கொடுத்தால் வரும் தலைமுறை உங்களை நன்றியுடன் நினைவு கூறும்.

                             மரண தண்டனை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு படமான விருமாண்டியை விட இந்த அரவான் இன்னும் ஆழமாக பதிகிறான்.படத்தில் குறைகளே இல்லையா என்றால் கண்டிப்பாக இருக்கு.இருந்தாலும் படம் சொல்ல வரும் கருத்திற்கு ஒரு ராயல் சல்யூட் அடித்து,மரண தண்டனையை  ஒழித்த  நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர ஆசைபடும் ஒரு தமிழனாக இந்த பதிவை எழுதி முடிக்கிறேன்.