Saturday, January 2, 2010

அடுத்தமாசம் கேன்சர் சரியாயிடும்.


சாப்பிட்டத் தட்டை தூரே
தூக்கி வீசி தொலைகாட்சியில்
புரூஸ்லியின் முஷ்டியை பதித்து...

எதிர்பட்ட தங்கைக்கு சனியன்
பட்டமளித்து, கீழே கிடந்த
வரலாற்றுப் புத்தகத்தை...

இயில்பின்றி கிழித்து
மின் விசிறிக்கும் மேலே
பறக்க விட்டு பெருமூச்சு விட்டு...

தம்பி பிறந்தநாள் பரிசை
கட்டை விரலால் நசுக்கி, குடி
தண்ணீர் குடத்தை எட்டி உதைத்து...

அலமாறியில் அடுக்கியிருந்த
அத்துனை துணிகளையும்
பார்த்த இடமெல்லாம் அள்ளிவீசி...

தேமேயென நின்றிருந்த மிதிவண்டியை
கீழே தள்ளி, பக்கத்து வீட்டுகாரர்
உட்பட அனைவரையும் சாடி...

கொதித்த நெஞ்சுடன் அமர்ந்த
என்னிடம் நெருங்கிய தந்தை
சொன்ன வார்த்தை இது...

”அடுத்தமுறை டூர் வந்தா போலான்டா
அப்பாவுக்கு அடுத்தமாசம் கேன்சர்
சரியாயிடும்” என்று இருமியபடியே...

நியாய விலை கடை

======================
இருக்கும் பொருட்களை
இல்லை என்று சொல்லி
பதுக்கி பணம் சேர்க்கும்
...
பசிக்கு உணவின்றி
பலர் தவிக்கும் வேளையிலும்
துளியும் கருணை இன்றி
அவர் உடைமை புசிக்கும்
....
பொய் கணக்கை
எழுதி வைத்து
பொய் பேசி திரியும்
....
இங்கே
பெயரில் மட்டுமே
இருக்கிறது
"நியாயம்"
-

நினைவுகள்


" குறைந்த பருவம் வரை தான்
அவளோடு என்று தெரியாமல் நேசித்தேன் ..
அவளை காணவே  பள்ளி சென்றேன் ...
அவள் கணக்கு சொல்லி தரும் போதே
நினைத்தேன் கவிழ்க்க போகிறாள் என்று ..
என்னவோ தெரியவில்லை - அவள்
பள்ளி வரவில்லை என்றால் மணமுடைந்து போகிறேன் ...
கோடை விடுமுறை ஏன்வந்தது - என்று
எண்ணி கொடையை திட்டுவேன்...
பள்ளி திறந்ததும் எல்லோரையும்
முந்திசென்று அவளிடம் சொல்வேன்

"GOOD MORNNING TEACHER" என்று ...."

கல்லறை வரிகள்

விலைமகளிர் கல்லறைகள்
*
கல்லறை ஒன்று-

படுப்பதை நினைக்கவே
பயமாகவும் அருவருப்பாகவும்
இவள் உணர்ந்ததால்
இவளின் விருப்பப்படியே
நிற்கும் நிலையிலேயே
புதைக்கப் பட்டிருக்கிறாள்.
*
கல்லறை இரண்டு-

இட நெருக்கடி காரணமாக
நாம் நிறைவேற்றாது விட்ட
இவளின் கடைசி ஆசை-
" என்னுடன் படுக்கையை
பங்கு போட்டவர்களையும்
சேர்த்தே புதைத்து விடுங்கள்"
*
கல்லறை மூன்று-

"தயவு செய்து என்னை
குப்புற புதைத்து விடுங்கள்"

ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை


ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.
*
அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
*
( ............ .............. ................. )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.
*
மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.
*
வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
*
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
*
கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

*"நம்பிக்கை விற்பவன்" *

மழையில் நனைந்தபடி வந்து,
கிளிக்கூண்டு நனையாத இடத்தில்
தன் சைக்கிளை நிறுத்திவிட்டு,
ரோட்டோர உணவகத்தின் உள்ளே,

பையத் துழாவி சில்லறைகளை
பலமுறை எண்ணிப்பார்த்துவிட்டு,
மழையால் தொழில் பாதிக்கப்பட்டதாக
மழையை கெட்டவார்த்தையில் திட்டி,

"இதெல்லாம் ஒரு பிழைப்பா?" என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு,
அரைச்சாப்பாடு கிடைக்குமா என்று
தயங்கியபடி கேட்டவனுக்கு,

தலைவாழை இல்லை போட்டு,
சிறப்பு சாப்பாடாக
ஒவ்வொன்றாய் பரிமாறியபடி
முதலாளி சொன்னார்:

"உன் பெருமை உனக்குப் புரியலை;
அரசு செய்யமுடியாததை,
அப்பன் ஆத்தா செய்யத் தவறியதை,
கிளி ஜோதிடன், நீ செய்கின்றாய்!"

நீ நம்பிக்கை விற்கின்றாய்;
நாடிவருபவற்கு நல்லது சொல்கின்றாய்;
உருப்படாமல் போய்விடுவாய் என்று
ஒருவருக்கும் நீ சொல்வதில்லை.

இடரினி இல்லை என்றும்,
விரைவில் துன்பம் விலகும் என்றும்,
நம்பிக்கை விதைக்கும் நீ
நல்ல தொழில் செய்கின்றாய்;

உனக்கு சாப்பாடு போடுவதில்
சந்தோசம் எனக்குத்தான் ;
பணம் தரவேண்டாம் நீ,
நன்றாகச் சாப்பிடப்பா"

வயிறுமுட்டச் சாப்பிட்டபின்
கிளிக்கும் உணவு தந்துவிட்டு,
கைதொழுது சொன்னான்:

"ஐயா, பெரியவரே!
இனி எனக்கு கலக்கமில்லை,
இந்தத் தொழில் பற்றி வருத்தமில்லை,
மழையைப் பார்த்தால்ஆகாதையா!
விரைந்து நான் போக வேண்டும்,
நாலு பேருக்காவது
நம்பிக்கை கொடுக்க வேண்டும்!"