Monday, February 22, 2010

சந்திராயனில் இருந்து சில அரிய படங்கள்…

சந்திராயன் விண்கலம் அண்மையில் நிலாவிற்கு நமது இஸ்ரோ அனுப்பியிருந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அந்த சந்திராயன் விண்கலம் நிலவிலிருந்து பூமியில் உள்ள அரிய சில புகைப் படங்களை அனுப்பியுள்ளது.
அவை உங்கள் பார்வைக்கு இதோ…


1
2
3
4
5
6
71
8


9
10
யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற்றிருக்கும் என நம்புகிறேன்.
நெக்ஸ்ட் வேற மேட்டரோட வரேன்…

Tuesday, February 16, 2010

சிதறல்கள்

பாதசாரிகள் கவனத்திற்கு 
கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம் ஓடி ஓடிக் கலைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அனாதை  நாய்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே !!!

திருடர்கள் ஜாக்கிரதை
சொக்க தங்கம் நூறுபவுன் நகை
ரொக்க பணம் ஐம்பதாயிரம்
ஸ்கூட்டர் டிவி என

பட்டியலிடும் போதுதான்
கண்டுகொள்ள முடிந்தது என்னால்
ஆனால்....
கதவு திறக்கும் பொழுதே
கண்டு கொண்டோ குரைத்தது
என வீட்டு நாய்.

முதன் முதலாய் அம்மாவுக்கு...*


ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போபபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

- கவிப்பேரரசு வைரமுத்து.

தொகுப்பு : கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

Thursday, February 11, 2010

கொஞ்சம் காதலித்து பார்



முதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா?
அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா ?
அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா ?
அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ? ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ?
இரவு முழுக்க உனக்காக அசைன்மென்ட் எழுதி தர அவள் எழுத்து அழகுக்காகவே அதை தராமல் வகுப்பில் திட்டு வாங்கியது உண்டா ?
”இன்னைக்கு நான் தான் செஞ்ச” என்றதும் யாருக்கும் தராமல் அவளின் டிபன் பாக்ஸ் முழுக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டதுண்டா?
காதலை மானசீகமாய் நட்பாக்க முயன்றதுண்டா?
நட்பான காதலை மறைக்க முயன்று அவளிடம் கையும் களவுமாக சிக்கியது உண்டா ?

ஒரு மாதம் கழித்து ” நானும் உன்ன லவ் பண்றனு நினைக்கற ” என அவள் சொல்ல ஜனரஞ்சகமாக வெட்கம் பழகியதுண்டா?
கல்லுரியின் இறுதி நாளில் தோள் சாய்த்து அவள் அழுதது உண்டா?
கல்லூரி முடித்து இருவரும் வேறு வேறு திசையில் பயணித்தது உண்டா?
சொந்த ஊரில் வேலை செய்யும் சௌரியங்களை விட்டு விட்டு உனக்காக மாற்றலாகி வந்ததுண்டா ?
இரவு முழுதும் அவள் கை பிடித்து கடற்கரையில் நடை பழகியது உண்டா ?
உன் பிறந்த நாளுக்காக அநாதை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து அந்த புகை படத்தை உன்னிடம் காட்டி உன்னிடம் முத்த பரிசு பெற்றதுண்டா ?
திடிரென உனக்கு வெளியூர் மாற்றலாக அழுது வீங்கிய கண்களோடு ரயில் பெட்டி மறையும் வரை கையசைத்தபடியே உன்னை வழியனுப்பியதுண்டா ?
பயணம் முடியும் முன்பாக 164 முறை அழைப்பு விடுத்தது காதலால் உன்னை திணறிபோக செய்ததுண்டா?
திடிரென அவளை பெண் பார்க்க வந்ததும், அதற்கு பின் நடந்தவைகளை அவள் விவரிக்க மூர்ச்சையடைந்து போனதுண்டா?

பெற்றோர் சம்மதிக்காத நிலையில் கூட வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் என்ன சந்தோசமா வெட்சுப்பனு நம்பிக்கை எனக்கு இருக்கு டா என்று உஙகளிடம் உளறியதுண்டா?
அப்படி சொன்னபோதும் கூட அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா ?
காதல் விவகாரம் அவள் வீட்டில் தெரிந்து அவளை அடித்து துன்புறுதுகையில் அலைபேசியில் சப்தம் கேட்டு துடி துடித்ததுண்டா?
”இனி மேல் அவள மறந்தர சொன்னா” என்று அவள் அறை தோழி சொல்ல சொல்ல உலகமே இருண்டு போனதுண்டா ?

நாளை அவளுக்கு திருமணம் என்ற நிலையில் அந்த நாளே நினைவில்லாமல் போகும் அளவு குடித்து குடித்து தனிமை வெரித்ததுண்டா ?
போதையில் கூட அவளுக்கு பிடித்த நாய் குட்டி அவள் கணவன் வீட்டில் வளர்க்க உரிமை உண்டா என்று பிதற்றியபடி மயக்கமடைந்தது உண்டா ?பல முறை கேட்டு விட்ட நண்பர்களுக்காக அவளை மறந்து விட்டதாக பொய் சொல்லி ஒரு மணி நேரத்தில் ஒரு முறையாவது அவள் நினைவுகளை கடந்து வருவதுண்டா ?

இல்லை என்றால் கொஞ்சம் காதலித்து பார்.

நன்றி : அடலேறு

http://adaleru.wordpress.com/2009/09/26/kadhlithu-paar/

Wednesday, February 10, 2010

காதல் காதல்

 துப்பாக்கி தேவை 
தாட்சாயிணி,

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா... வயசாச்சில்ல...' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை 'ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

'சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். 'அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். " தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க... நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க... அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.
- பிரதியங்காரக மாசான முத்து

நன்றி : செல்வேந்திரன்

காதலர் தின சிறப்பு கவிதைகள் - 2


கல்யாணம் செய்ய

உன் தோழியின்


கல்யாணவீட்டில்


தாலிகட்ட உதவிசெய்த


உன்னைப்


பார்த்தபின் தான்


எனக்கும் ஆசை வந்தது


தாலிகட்டி கல்யாணம் செய்ய...!


-யாழ்_அகத்தியன்


வாய் ஓயாமல் பேசும் பெண்கள்


வாயாடி என்றால் ….


நீ கண்ணாடி !!!


எனக்கு பேராசையெல்லாம்


எதுவும் கிடையாது


உன் பெயருக்கு பின்னே


என் பெயர் வரவேண்டுமென்கிற


பெயராசைதான் உண்டு !


-ஷிப்லி




அன்பே உன் மனதில்

நான் இல்லை என்றாய்
துடித்துப் போனேன் !

பின்பு

உனக்கு மனசே இல்லை
என்று தெரிந்து
ஆறுதல் அடைந்தேன் !


உன்னுடன் நான் கழித்த

நொடிகளைத்தான்

உருக்கி வார்த்து

உலகம் கொண்டாடுகிறது

காதலர் தினமென...


வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...

என் காதலியின் பிறந்த நாள்



உன் பிறப்பு

உன் தாய்க்குத்

தாய்மையையும்,

எனக்கு

வாழ்வையும்

தந்தது

நீ பிறந்த

பிறகுதான்

உன் அப்பாவுக்கே

பெயர் வைத்தார்களா?

அழகப்பன் என்று!

தன்

சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை

முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான்

பிரம்மன்!


கால எந்திரம்

கிடைத்தால்

நீ பிறந்தபொழுது,
நான் என்ன

செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!


உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள்

அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன
எல்லாத் தெய்வங்களும்!


பிறக்கும்போது

3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய்

உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான்

சேர்க்க முடிந்ததா?


நீ பிறந்த

மருத்துவஅறைக்கு

ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க

அங்குதான்
பிரசவம்

பார்க்கவேண்டுமென
அடம்பிடிக்கிறார்களாம்

கர்ப்பிணி பெண்கள்.

Friday, February 5, 2010

காதல்... பெண் மீது அல்ல



என்னுயிர் நீத்தேனும் தேச
மக்களைக் காப்பேன் என
உறுதி எடுத்துக் கொண்டு
இராணுவத்தில் சேர்ந்தேன்
என்னுயிர் போனதும் தோட்டா
முழக்கத்துடன் அடக்கம் செய்து
வீரவணக்கம் செய்து விட்டு
மறந்து விடுவர்
எனத் தெரிந்தும் உயிர்க்
கொடுக்கத் துணிந்து விட்டேன்
காதலுக்காக...
என்னைப் பெற்ற
என் தேசத்தின் மீது!
*


நன்றி :சக பதிவர் புலவன் புலிகேசி - வழிப்போக்கன்.




பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

”நீங்கள் இருவரும் ஒரே நாளில் அதே நேரத்தில் ஒரே ஊரில் பிறப்பீர்கள். நீங்கள் பிறக்கும் வரை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளலாம். பிறந்த பிறகு என்ன வாகிறது என்று பாருங்கள்.”

அவ்விரு உயிர்களும் தத்தமது தாய் வயிற்றில் சூல் கொண்டன.


சில வாரங்களுக்குப் பிறகு,
“ஹேய்! இங்கே ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கு. நான் வந்திருக்கேன்னு கொண்டாடறாங்க.”
”ஹீம்.. நான் வந்ததே இவங்களுக்கு இன்னும் தெரியலன்னு நினைக்கறேன்”

இன்னும் சில நாட்கள் செல்ல...
“ஐயோ..கொஞ்சம் எழுந்து நடக்கக் கூடாதா அம்மா... டாக்டர் பத்திரமா இருக்கச் சொன்னதுக்காக இப்படியா நாள் பூரா படுத்திருக்கணும்?”
“எனக்கு ஒரே ஆட்டமா இருக்கு. நாள் பூரா மாடி ஏறி இறங்கிட்டு இருக்கா எங்க அம்மா”



ஓரிரு மாதங்களுக்குப் பிறகு,
”எதுக்கு இப்படி சாப்டுட்டே இருக்காங்க. இனிமே எனக்குத் தர்றதெல்லாம் கொழுப்பாத் தன் சேரும்.”
“ஏய், உனக்கு எப்பவாச்சும் வயித்தைக் கிள்ளற மாதிரி லேசா வலி வர்றதுண்டா? எனக்கு தினமும் ரெண்டு மூணு தடவையாச்சும் அப்டி வருது.”



சில வாரங்களுக்குப் பிறகு,
”நான் இன்னும் தலை கீழா திரும்பவே இல்லை. என்னவா இருக்கும்னு பாக்க டாக்டர் கிட்டெ போறாங்க.”

“நான் திரும்பிட்டேன். அதனால அம்மாக்கு ரொம்ப மூச்சு வாங்குது. முன்ன மாதிரி வேலை செய்ய முடியல போல. பாவம்.”


அந்த நாளும் வந்தது
”அட! இதோ நான் வந்துட்டேன். என்னை அழகா ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்களே. இது தான் பூமியா? பரவால்லியே அழகா, படு சுத்தமா இருக்கு. வெள்ளை வெளேர்னு உடுத்தி யார் இவங்க எல்லாம்? தேவதைங்க மாதிரியே...எல்லாரும் சிரிக்கறாங்க என்னைப் பார்த்து.. ஓ, நான் அழணும் இல்ல...குவாஆஆஆஆஆஆஆ!!!”




”இதோ, நானும் வந்துட்டேன். காதே கிழியற மாதிரி கத்தறாங்க அம்மா. என்ன இடம் இது. இருட்டா, குறுகலா. என்னை இந்தக் கிழவி தான் வெளிய கொண்டு வந்தாங்களா? பரவாயில்ல, எங்க அம்மா பாயில படுத்திருக்காங்க. இங்கேயும் எல்லாரும் சிரிச்சிட்டுத் தான் இருக்காங்க. நானும் அழணும்ல? குவாஆஆஆஆஆஆஆ!!”

சில ஆண்டுகளுக்குப் பிறகு,
”அர்ஜுன், வெளிய தலைய நீட்டாதே. ஜன்னலை க்ளோஸ் பண்ணு. அம்மா ஏசி போடப் போறேன். மை காட்! இன்னிக்கும் லேட்டு. பை த வே, பேச்சு போட்டிக்குத் தயார் பண்ணிட்டியா?”



”யெஸ் மம்மி. இந்தியாவில் வறுமை. அட்டகாசமான டாபிக், சூப்பரா பாய்ண்ட்ஸ் ரெடி பண்ணிட்டேன்.”
“சமத்து...” மகனின் தலையை வருடி விட்டு நேராகப் பார்த்து காரைச் செலுத்துகிறாள் அந்த அம்மா.


”டேய் ராஜா, என்னடா அங்க பராக்கு பாத்துட்டு இருக்கே? இந்தா இந்த மூட்டையை எடுத்துட்டு மூணாவது மாடிக்குப் போ”
”சரிம்மா...” சீறிச் செல்லும் அந்தக் காரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராஜூ கைப்பிடிச் சுவர் இல்லாத அந்த மாடிப்படிகளில் லாகவமாக ஏறிச் செல்கிறான்.


இணையத்தில் படித்தது

நகுலன் கவிதை தொகுப்புகள்

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’

தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.

நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!


இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!



என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!



மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!



வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!





யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!



நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!



உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?





ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!



முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!



வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

credits vikatan.com

காதலர் தின சிறப்பு கவிதைகள் - 1[வைரமுத்து ]

 

நான் காதலுக்காக வழக்காடுகின்றேன்

வானவில்லை
நீங்கள்
தண்ணீர்த் தூறலில்
தரிசித்திருப்பீர்கள்
நீங்கள்
கலையாத வானவில்லை
கண்டதுண்டா?
கண்ணீர்த் தூறலில்
முளைப்பதால் தானோ
அது கலையாமல் இருக்கிறது
அது தான்
காதல்
காதல்
மனிதனைத் தேவனாக்கும்
இரண்டாம் பரிணாமம் இது
இந்த
காதல் மேகம் தான்
மனமென்னும் எரிமலையில்
மழைசிந்தி, மழைசிந்தி
அதில்
உல்லாச வனங்களை
உற்பத்தி செய்யும்
இதய ரோஜாச் செடியில்
இந்த
ஒற்றைப்பூப் பூத்துவிட்டால்
அத்துனை முட்களும்
உதிர்ந்து போகின்றன
வாலிபம் ஏந்திப்பார்க்கும்?
திருவோடும் இதுதான்
வாலிபம் சூடிப்பார்க்கும்
கீரிடமும் இதுதான்
முதலில் சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை
இப்போதோ
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது
காதல்
காதுகுடைந்து போட்ட
கோழி இறகுங்கூட
மயிலிறகுக்கான
மரியாதைக்குரியது
காதல் கடிதங்கள்
பருவம் எழுதும் பரீட்சைகளில்
எழுத்துப்பிழைகள் மன்னிக்கப்படுவது
இந்தப் பரீட்சையில்தான்
அக இலக்கணம்
அதைக்
காதல் வழுவமைதி என்று
கணக்கில் வைத்துக் கொள்கிறது.
காதல் கடிதங்களுக்கு
அஞ்சல் நிலையங்கள்
இடும் முத்திரை
இரண்டாம் முத்திரைதான்
அதற்கு முன்பே
உதடுகள் இடும்
முத்த முத்திரைதானே முதல் முத்திரை?
இலக்கிய வாசல்களில்
கனவுகளாலும்
கண்ணீராலும் இடப்படும்
காதல் கோலம்
சமூக வாசல்களவீல்
எச்சிலால் அல்லாவா
அர்ச்சிக்கப்படுகிறது.
அமராவதிகளும்
அனார்கலிகளும்
லைலாக்களும்
தேவதாஸ்களும்
காதல் பிச்சை
கேட்டுக்கேட்டு
மரணத்தின் பாத்திரத்தில்
பிச்சையாய் விழுந்தார்கள்
அனார்கலியின் ஞாபகம்
ஆறுமா
சலீமின்
ராஜ மாடங்களில்
கூடுகட்ட வேண்டிய குயிலுக்கு
கல்லறைக் கூடல்லவா
கட்டிக் கொடுத்தார்கள்.
தேவதாஸ் என்னானான்
காதல் நினைவுகளைக்
கழுவ
தண்ணீரில் மிதந்து தண்ணீரில் மிதந்து
சாவுத் தீவில்
கரை ஒதுங்கினான்
அவராவதி என்னும்
ராஜகவிதை
ஓர் ஏழைப்புலவனின்
மனப்பாடத்திற்கு ஏன்
மறுக்கப்பட்டது
நிஜத்தில்
எழுதுகோலுக்கும்
செங்கோலுக்கும்
வரலாற்றில் நிகழ்ந்த
வர்க்கப் போட்டியிது
இதுவரை
எழுத்தாணிகளும்
பேனாக்களும்
காதலின் கண்ணீணீரத்
தொட்டு எழுதத் தோன்றினவன்றி
துடைக்கும் விரலாய் நீளவில்லையே
விதியாம்
விதியை எழுதும் பேனாவில்
ஆயிரங் காதலரின்
ரத்தந்தான் மையாகுமென்றால்
அந்தப் போனாவை
ஒரு
குஷ்டரோகியிடம் கொடுத்துவிடுங்கள்
சமூகம்
தனது
பரிசோதனக் குழாயில்
இறந்தகாலத்தின் கண்ணீரை
எடுத்துக் கொண்டு
நிகழ்காலக் கண்ணீரை ஏன்
நிராகரிக்கிறது?
போதும்
காதலின்
சௌகர்ய உலாவுக்கு
நாம்
இன்னொரு வீதிசெய்வோம்
அது
கண்ணீர்ச்சேறு படாத
காதல் வீதி
அந்த வீதி
அமையும் வரைக்கும்
காதலுக்கு
இரங்கற்பா எழுதுவோரே
உங்கள் பேனாவைப்
பால்கணக்கு எழதமட்டுமே
பயன் படுத்துங்கள்........

எழுதியது வைரமுத்து...

விரைவில் எனது வாழ்த்துக்கள்..................