Sunday, January 10, 2010

சுகப் பிரசவம்!......

“வலி வரலைன்னா
சொல்லும்மா சிசேரியன்
பண்ணிடலாம்”
-கேட்ட மருத்துவரிடம்,
வேண்டாமென மறுத்துவிட்டேன்!

பெத்தவருக்கு தான்
பெருஞ்செலவு ஆகுமென்று!

வலியை வரவழைக்க
வலிய முயன்றேன்!

எனிமா ஏற்று
குடலை சுத்தமாக்கி,

புடவை அவிழ்த்து
இரவுடை தரித்து,

முக்கத் தொடங்கினேன்
கட்டிலில் படுத்து!

பற்றிக்கொள்ளத் துணையைத் தேடி
கட்டில் கம்பியைப் பற்றிக்கொண்டு,
விழிகளைப் பிதுக்கி,
பல்லைக் கடித்து,
அடிவயிறு உப்பி,
கால்களை உதறி,
முக்கி முக்கி,
உந்தி உந்தி
தள்ளுகிறேன் ஓர் உயிரை,
உலகைக் காண!

முகமெல்லாம் வியர்த்து,
உடல் தளர்ந்து,
உள்ளமும் சோர்ந்து,

உள்ளே, செத்துப்
பிழைத்தேன், நான்!

வெளியே, சொன்னார்கள்:
“சுக“ப் பிரசவம் என்று!.........

யார் நீ? .......

எங்கிருக்கிறாய்… என்னவளே….

யார் நீ?
எப்படி இருப்பாய்?
ஒல்லிக்குச்சியா?
பூசணிக்காயா?
பனைமரமா?
குள்ளக் கத்தரிக்காயா?

ஆனால்
நிச்சயமாய் கேள்விக்குறிகளின்
நிரந்தரப் பதிலாய்…
பெண்ணாய்,
பெண்ணியத்தோடு…

தோள்களில் சாய்ந்தும்,
தலைமுடியைக் கோதியும்,
மூக்கோடு மூக்கை உரசியும்,
என் உயிரைப் பிழியப்போகின்றாய்…

தனிமையை…
அழுகையை…
அன்பை…
ஆண்மையை….
முழுமையாய் ஆக்கிரமிக்கப் போகின்றாய்..

நம் சிசுவை வயிற்றிலும்,
உன் நினைவுகளை என் இதயத்திலும்
பாரமின்றி நிரப்பப்போகின்றாய்…

நினைக்க… நினைக்க
இனித்தாலும்…

தொட்டிக்குள் நீந்தும்
மீனைப் போல

உன்னையே சுற்றும் என்
கற்பனைத் தாளில்

ஏனோ நீ மட்டும்
விவரிக்கப்படாத விபரமாய்…

நானோ கிறுக்கப்படாத
வெற்றுக் காகிதமாய்…

முகம் தெரியாத உனக்காக,
முகவரி இடப்படாத
வாழ்த்து அட்டைகள்,
பரிசுப் பொருட்கள்…
கூடவே நானும்.......

படித்தவை [பிடித்தவை]-1

1.சீக்கிரம் வந்துவிட்ட தந்தை
  அரைப்பரீட்சையில் தேராத
  மதிப்பெண் அட்டையுடன் நான்.

2.எப்படி சொல்வது
தனிக்குடித்தனம் போவதை
உடம்பு சரியில்லையாவென கேட்கும் தாய்......

3.இரவு நீண்டுகொண்டே
இருக்கிறது, கையில்
கொடுக்கவிருக்கும் காதல் கடிதம்.

4.பிச்சைக் காரர்
அருவருப்பு, வெட்கம்
துறந்த ஒருவகைத்
துறவிகள்.

5.மருத்துவர்
கண்ணுக்குத் தெரிந்த
கடவுள்கள் - வழக்கம்போல்
காசு வாங்கிக் கொண்டு.

6.கனவு
சேகரிக்க மறந்த
சம்பவங்களின்
தொகுப்பு.

7.விவாதம்
முடிவுகளைத்
திணிக்க முயலும்
அமைதிப் போராட்டம்.

கண்ணால் கண்ட காதல் சம்பவம்



கல்லூரியில்,படித்துக்கொண்டிருந்தபொழுது என் நண்பன் இன்னொரு பிரிவைச்சார்ந்த அமி என்ற பெண்ணின் மீது அவனுடைய காதல் வகுப்புத் தோழிகளின் ஆதரவுகளோடு அமோகமாக வளர்ந்தது.

முதலில் அந்தப் பெண்ணின் பெயரை காதலிக்க ஆரம்பித்தான். பின் அவள் உயிரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான்.அவளின் பிறந்தநாளுக்கு கவிதைகள் வாழ்த்து அட்டைகள் ரோஜாப்பூக்கள் என களை கட்டியது.


- காதல்
வாழ்த்து அட்டை வியாபாரியை..
வாழ வைக்கிறது!
ரோஜாப்பூக்களை..
குடிசைத்தொழிலாக்குகிறது!

அந்தப்பெண்ணனின் வீட்டிற்கு சென்று அவளது தாயாரின் கருணையையும் மதிப்பையும் பெற்று சுமுகமாய் வளர்ந்த அந்தக்காதல் கடைசியில் அந்தப்பெண்ணிற்கு வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையின் வடிவில் வந்தது அவர்களது காதலின் எதிரி.


"நீ நாங்கள் சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் " என்று அவர்களது பெற்றோர் மிரட்டினார்களா என்று தெரியவில்லை ஆனால் அந்தப்பெண் கடைசியில் மனசு மாறிவிட்டாள்.

நாங்களும் கடைசி வரை போராடினோம் . அந்தப்பெண்ணின் உறவினர் ஒருவரிடம் அந்தப்பெண்ணிற்கு விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்கள்தான் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று நிலைமையை விளக்கி அந்த உறவினரையும் அழைத்துச் சென்று எல்லோர் முன்னிலையிலும் கேட்கும் பொழுது
"அவனை நான் காதலிக்கவே இல்லை ச்சும்மா ப்ரண்ட்சிப்தான்" என்று சொல்லிவிட்டாள்.
அந்தக்கடுப்பில்தான் நான் எழுதினேன் ஒரு கவிதை..

காதல் யாரையும் ஏமாற்றுவதில்லை
ஆனால்
காதலிகள்தான்..


அதன் பிறகுதான் உணர்ந்தேன். அவனது காதலி அவனை ஏமாற்றிவிட்டதற்காக எல்லோரையும் நாம் குறைகூறக் கூடாது என்று. எத்தனையோ காதலர்கள் காதலித்து பெண்களை ஏமாற்றிவிட காதலிகள் - காதலன் வீட்டுமுன் போராட்டம் என்று எத்துணை செய்திகளில் படித்திருக்கின்றோம்

கடைசியில் எனது நண்பன் எனக்கு ஒரு கடிதமும் தனது காதலிக்கு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்று தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டான். நல்லவேளை அவனது தாய் உடனே கவனித்து விட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி விட்டார்கள்.

தற்கொலையைப்போல
இழிவான செயல் எதுவுமில்லை
ஆகவே
காதலிக்காதீர்கள்

பின்னர் தந்தையின் சுடுசொற்களுக்கு இடையேயும் சமுதாயத்தின் பழிசொற்களுக்குpடையேயும் தடுமாறி போராடி வெற்றி பெற்று தற்பொழுது சென்னையில் வெப் டிசைனராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான். உலக நாடுகளிலிருக்கும் பல நிறுவனங்களுக்கு Freelancer webdesigner - ஆக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான்.

என்னால் இன்னமும் மறக்கமுடியாது என்னிடம் அவன் இப்படி புலம்பியதை :

"டேய் அவ இப்பவும் விதவையாய் வந்தால் கூட நான் ஏற்றுக்கொள்வேன்டா.."

'பாருங்க..எந்த அளவுக்கு அந்தப் பெண்ணை காதலித்திருப்பான் அவன்.? ஆனால் இப்படி ஏமாத்திட்டுப் போயிட்டாளே அவள்..'

அதுவும் நல்லதுக்குத்தான். இறைவன் ஒரு சோகத்தை கொடுத்து கெட்டவர்களையும் நல்லவர்களையும் எனது நண்பனுக்கு அடையாளம் காட்டிவிட்டான்.

காதலிக்கு கல்யாணம்
இவன்
காதல் விதவையானது

எனது நண்பன் ஜகூபாவுக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. என்ன ஒரு ஆச்சர்யமென்றால் எந்தப் பெயரை விரும்பி அந்தப்பெண்ணைக் காதலித்தானோ அதே பெயருள்ள பெண்ணே இவனுக்கு மனைவியாக அமையப்போகின்றாள்.

செங்கோட்டையைப் பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூரில் செட்டிலான ஒரு குடும்பத்தில் இருந்து அவன் விரும்பிய பெயர் கொண்டவளே உயிர் நிரப்ப வரப்போகிறாள். இப்போது அவளோடு இணையத்தில் இதயத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றான்.

ஆனால் நான் இன்னமும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். எவ்வளவு தீவிரமாய் எனது நண்பனைக் காதலித்த அந்தப்பெண் கடைசி நேரத்தில் மனம் மாறிய காரணம் என்ன..? பலவந்தமா இல்லை பணபந்தமா?

பெயரைக் காதலித்து - அவளின்
உயிரைக் காதலித்தான்
அவளோ
பெயருக்கு காதலித்துவிட்டு
உயிரைப் பறிக்க நினைத்தாள்.........

அயல்தேசத்து கவிதை.......


மீண்டும் அயல்தேசத்திற்கு
தினமும் என்னை அழவைக்கும் கவிதை


தூக்கம் விற்ற காசுகள்
இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகின்றது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலே ...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயனத்தூனூடே
விற்றுவிட்டு

கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மர உச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்கமுடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை

அதையும் பறிக்கும் ஒவர்டைம்கள்

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த,அப்பாவின் திட்டுடன் எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து கவிதை......   

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்

அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்!


இறுதிநாள் நம்மிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப்பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
றியாழும் தினாரும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ?

ஓவ்வொறு முறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்றகுழந்தையின்
வித்தியாசப்பார்வை...
நெருங்கியவர்களின்... திடீர்மறைவு

இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
வீட்டு கஷ்டங்களும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு...........

இதற்க்கு பெயர்தான் " வெட்கமோ ".......


" வைரமுத்துவின் " காதலித்துப்பார்.........