Tuesday, May 4, 2010

எனக்கு பிடிச்ச கதை

 

சேட்டைக்காரன்

நான் ஆசையாய் மறுபடி ஒருமுறை கண்ணாடியில் என்மீசையைப் பார்த்துவிட்டு - மழிக்கத் துவங்கினேன்.

இத்தனை அழகான மீசையை எதற்கு எடுக்கிறாய் என்று கேட்கிறீர்கள் தானே?

அந்த விபரம் கூறுமுன் - என்னைப் பற்றிக் கொஞ்சம்...

சார்லி. சிறுவயதில் முதல் மகனாய் என்னைப் பெற்ற உடன் இறந்துவிட்ட அம்மா, நான் கல்லூரியில் படிக்கும்போதே கிராமத்தில் இறந்த அப்பா... இதெல்லாம் உங்களுக்கு போரடிக்கும்.

நான் கல்லூரிப்படிப்பு முடிந்து எத்தனையோ இண்டர்வ்யூக்களுக்குப் போயும் வேலை கிடைக்கவில்லை என்றுதான் தொழிலதிபர் கார்வண்ணனைச் சந்திக்க முடிவெடுத்தேன். வெளியே அவர் அந்தத் தொழில் செய்கிறார், இந்தத் தொழில் செய்கிறார் என்று பெயர் கொஞ்சம் ரிப்பேரானவர்தான் என்றாலும் அவரிடம் சென்று என் நிலையை எடுத்துக் கூறினால் அவருக்கிருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஏதாவதொரு வேலை தருவாரென்ற நம்பிக்கையில் நேற்று அவர் பங்களாவிற்குப் போனேன்.

வாட்ச்மேன், தோட்டக்காரனுடன் சமையல்காரியைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்க டபாய்த்துவிட்டு உட்புகுந்தேன்.

வேலை கேட்பது போல பவ்யமாய்ப் போனால் மதிப்பிருக்காதென்பதால், நான்கைந்து பேர் அமர்ந்திருக்கும் பெரிய போர்டிகோவில் நின்று கொண்டிருந்த வீட்டு வேலைக்காரன் ஒருவனிடம் ‘சார் இருக்காரா?’ என்று கேட்டேன்.

யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர் வெளியே வந்தபிறகு பார்க்கலாமென்று அவன் சொல்லவே, சும்மா அந்தக் கட்டத்தில் உலாவினேன்.

அப்போதுதான் - ஒரு அறையின் கொஞ்சமாய்த் திறந்த ஜன்னலூடே அந்த சம்பாஷணை கேட்டது.

“மிஸ்டர் கார்வண்ணன்.. இது எட்டு லட்ச ரூபாய் விவகாரம். நாளைக்கு கோல்டன் ஹார்வெஸ்டுக்கு யாரை அனுப்பறீங்க?”

“நீங்க கவலையே படாதீங்க பெரிய நாயகம். நான் காலைல எட்டு மணிக்கு மணிமாறனை அனுப்பறேன். கழுத்துல நங்கூரம் டிசைன் செஞ்ச தங்க செய்ன் போட்டிருப்பான். மீசை இருக்காது. அதுவுமில்லாம நாந்தான் சொன்னேனே... ஆள் வந்த உடனே ‘வெல்கம்’ ன்னு நீங்க சொல்லுங்க. அவன் உடனே வேறெதுவும் சொல்லாம ‘யெஸ் வி கேன்’ன்னு சொல்லுவான். அதான் நமக்குள்ள கோடிங். வழக்கம்போல ரூம் நம்பர் நூத்தி ஒண்ணுதானே.. பணத்தை குடுங்க. சரக்கு அடுத்த நாளே வந்து சேரும்”

-அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை நான். நங்கூர டாலருடன் செய்ன் ரெடி பண்ண வேண்டுமே!

புரிந்ததல்லவா என் திட்டம்? வேலையத் தேடி வேட்டைக்காரனாக இருப்பதை விட, ஒரே நாள் சேட்டைக்காரனாகி எட்டு லட்சத்தை கைப்படுத்த முடிவெடுத்தேன். இரவோடிரவாக செய்ன் ரெடி செய்துவிட்டேன். இதோ காலை ஏழு மணி. மீசையையும் எடுத்தாயிற்று. அவன் எட்டு மணிக்குத்தானே போவான்.. கொஞ்சம் முந்திச் சென்று எட்டு லட்சத்தை லபக்கி வரலாமென்று புறப்பட்டேன்.

***

ஹோட்டல் கோல்டன் ஹார்வெஸ்ட் பணக்காரத் திமிருடன் இருந்தது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருந்த நூற்றி ஒன்றைத் தேடிப் போய்த் தட்டினேன்.

கதவு திறந்து ‘வெல்கம்’ என்றார் அந்த யாரோ.

உடனே ஞாபகமாய் ‘யெஸ் வி கேன்’ என்றேன்.

“நீதான் மணிமாறனா? கார்வண்ணனோட ரைட் ஹாண்ட்?”

“யெஸ்” பந்தாவாய் சொல்லியபடி நங்கூர டிசைன் செய்னை காஷுவாலாக எடுத்து டீ ஷர்டின் வெளியே விட்டேன். ‘இந்தா எட்டு லட்சம்’ என்று பெட்டியைத் தருவாரென எதிர்பார்த்தேன்.

ஆனால் அவரோ-




“யுவார் அண்டர் அரெஸ்ட்” என்றார் சினிமா க்ளைமாக்ஸ் போல.

திடுக்கிடலோடு ஓட நினைத்துத் திரும்பினேன்.

போட்டிருந்த காக்கி உடைக்கு விசுவாசமாய் கறுப்பு ராட்சஷனை கையிலேந்தி இருவர் நின்றிருந்தனர்.

***

“சொல்லுடா.. எங்களுக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் நீ ஏழு கொலை பண்ணிருக்க... அது போக கார்வண்ணனோட சேர்ந்து வேற என்னென்ன சமூக விரோதம்லாம் செஞ்சிருக்க?”

என்னைப் பிடித்த அதிகாரி பின்மண்டையில் தட்டியவாறே கேட்டுக் கொண்டிருக்க, எதிரிலிருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி விளக்கம் கொடுத்தார்... “நேத்து எங்களுக்குக் கிடைச்ச நியூஸ்படி நாங்க அவசரமா நைட்டே கார்வண்ணனை வீட்டுல வெச்சு விசாரிக்கற விதத்துல விசாரிச்சுட்டோம். ஏழு கொலையையும் உன் மூலமா அவர் செஞ்சதை இன்னைக்கு அதிகாலைலதான் ஒப்புகிட்டார். கடைசியா அவர் சொன்னது நீ இன்னைக்கு இந்த ஹோட்டலுக்கு வர்ற விஷயம் பத்தித்தான். அதுனாலதானே உன்னைப் பிடிக்க முடிஞ்சது?”

நான் ஈனமான குரலில் கதறினேன்..

“நான் கார்வண்ணனைப் பார்க்கணும். இல்லைன்னா நீங்களே அவர்கிட்ட என்னைக் கூட்டீட்டுப் போங்க. ‘இவன்தான் மணிமாறனா?’ன்னு கேளுங்க” என் குரல் உடைந்திருந்தது.

“ஏண்டா.. அவர்தான் ஜீப்லேர்ந்து குதிச்சு லாரில அடிபட்டு இறந்துட்டாரே.. டாரே என்ன இறந்துட்டானே.. அவன என்ன கூப்டறது? நீ சொல்டா நாயே..”

அவர் அடித்த அடியில் என் டீ ஷர்ட் சிவப்பானது.

ஸார்.. நீங்களாவது சொல்லுங்க சார் நான் மணிமாறனில்லை, சார்லீன்னு....


கதையை எழுதியவர் : பரிசல்காரன் [http://www.parisalkaaran.com/2009/12/blog-post_23.html]

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!