Friday, February 5, 2010

நகுலன் கவிதை தொகுப்புகள்

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’

தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.

நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!


இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!



என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!



மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!



வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!





யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!



நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!



உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?





ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!



முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!



வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

credits vikatan.com

1 comment:

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!