Friday, February 5, 2010

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

”நீங்கள் இருவரும் ஒரே நாளில் அதே நேரத்தில் ஒரே ஊரில் பிறப்பீர்கள். நீங்கள் பிறக்கும் வரை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளலாம். பிறந்த பிறகு என்ன வாகிறது என்று பாருங்கள்.”

அவ்விரு உயிர்களும் தத்தமது தாய் வயிற்றில் சூல் கொண்டன.


சில வாரங்களுக்குப் பிறகு,
“ஹேய்! இங்கே ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கு. நான் வந்திருக்கேன்னு கொண்டாடறாங்க.”
”ஹீம்.. நான் வந்ததே இவங்களுக்கு இன்னும் தெரியலன்னு நினைக்கறேன்”

இன்னும் சில நாட்கள் செல்ல...
“ஐயோ..கொஞ்சம் எழுந்து நடக்கக் கூடாதா அம்மா... டாக்டர் பத்திரமா இருக்கச் சொன்னதுக்காக இப்படியா நாள் பூரா படுத்திருக்கணும்?”
“எனக்கு ஒரே ஆட்டமா இருக்கு. நாள் பூரா மாடி ஏறி இறங்கிட்டு இருக்கா எங்க அம்மா”



ஓரிரு மாதங்களுக்குப் பிறகு,
”எதுக்கு இப்படி சாப்டுட்டே இருக்காங்க. இனிமே எனக்குத் தர்றதெல்லாம் கொழுப்பாத் தன் சேரும்.”
“ஏய், உனக்கு எப்பவாச்சும் வயித்தைக் கிள்ளற மாதிரி லேசா வலி வர்றதுண்டா? எனக்கு தினமும் ரெண்டு மூணு தடவையாச்சும் அப்டி வருது.”



சில வாரங்களுக்குப் பிறகு,
”நான் இன்னும் தலை கீழா திரும்பவே இல்லை. என்னவா இருக்கும்னு பாக்க டாக்டர் கிட்டெ போறாங்க.”

“நான் திரும்பிட்டேன். அதனால அம்மாக்கு ரொம்ப மூச்சு வாங்குது. முன்ன மாதிரி வேலை செய்ய முடியல போல. பாவம்.”


அந்த நாளும் வந்தது
”அட! இதோ நான் வந்துட்டேன். என்னை அழகா ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்களே. இது தான் பூமியா? பரவால்லியே அழகா, படு சுத்தமா இருக்கு. வெள்ளை வெளேர்னு உடுத்தி யார் இவங்க எல்லாம்? தேவதைங்க மாதிரியே...எல்லாரும் சிரிக்கறாங்க என்னைப் பார்த்து.. ஓ, நான் அழணும் இல்ல...குவாஆஆஆஆஆஆஆ!!!”




”இதோ, நானும் வந்துட்டேன். காதே கிழியற மாதிரி கத்தறாங்க அம்மா. என்ன இடம் இது. இருட்டா, குறுகலா. என்னை இந்தக் கிழவி தான் வெளிய கொண்டு வந்தாங்களா? பரவாயில்ல, எங்க அம்மா பாயில படுத்திருக்காங்க. இங்கேயும் எல்லாரும் சிரிச்சிட்டுத் தான் இருக்காங்க. நானும் அழணும்ல? குவாஆஆஆஆஆஆஆ!!”

சில ஆண்டுகளுக்குப் பிறகு,
”அர்ஜுன், வெளிய தலைய நீட்டாதே. ஜன்னலை க்ளோஸ் பண்ணு. அம்மா ஏசி போடப் போறேன். மை காட்! இன்னிக்கும் லேட்டு. பை த வே, பேச்சு போட்டிக்குத் தயார் பண்ணிட்டியா?”



”யெஸ் மம்மி. இந்தியாவில் வறுமை. அட்டகாசமான டாபிக், சூப்பரா பாய்ண்ட்ஸ் ரெடி பண்ணிட்டேன்.”
“சமத்து...” மகனின் தலையை வருடி விட்டு நேராகப் பார்த்து காரைச் செலுத்துகிறாள் அந்த அம்மா.


”டேய் ராஜா, என்னடா அங்க பராக்கு பாத்துட்டு இருக்கே? இந்தா இந்த மூட்டையை எடுத்துட்டு மூணாவது மாடிக்குப் போ”
”சரிம்மா...” சீறிச் செல்லும் அந்தக் காரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராஜூ கைப்பிடிச் சுவர் இல்லாத அந்த மாடிப்படிகளில் லாகவமாக ஏறிச் செல்கிறான்.


இணையத்தில் படித்தது

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!