Wednesday, January 20, 2010

கொலைகள் நடப்பது உனக்காக


குருவும் சீடனும் கானகத்தில் மவுனமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.கானகத்தின் அழகை ரசித்துக்கொண்டே வந்தான் சீடன்.அந்த அழகை குலைப்பதுபோல் ஒரு பறவையின் அழுகுரல் கேட்டது.காட்டுப்பூனை ஒன்று அழகிய கிளி ஒன்றை பிடித்து குதறிக் கொண்டிருந்தது.
எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தார் குரு.கிளியை திரும்பி திரும்ப பார்த்தபடி நடந்தான் சீடன்.பிறகு ஏதோ யோசித்தான்.கல் ஒன்றை எடுத்து பூனையின் மீது எறிந்தான்.பூனை கிளியை விட்டது.கிளி தப்பி பறந்தது.
"உலக வரலாற்றை மாற்றி விட்டாய்"என்றார் குரு.மரத்தடியில் மவுனமாக அமர்ந்தார்.
"புரியவில்லை குருவே" என்றான் சீடன்.
"இன்னும் ஒரு மணிநேரம் இந்த இடத்தை விட்டு எழுவதில்லை என உறுதி அளிக்கிறாயா?" என்று கேட்டார் குரு.
"செய்கிறேன்" என வாக்குறுதி கொடுத்தான் சீடன்.
இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.
45 நிமிடங்கள் கடந்தன.காற்றின் சலசலப்பை தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் கானகம் அமைதியாக இருந்தது.
"காப்பாற்றுங்கள்" என ஒரு பெண்ணின் ஓலம் கேட்க துவங்கியது.விரைவில் அந்த மரத்தடியை நோக்கி ஒரு பெண் ஓடிவந்தாள்.துரத்திக்கொண்டு இருவர் ஓடி வந்தனர்.அவளை பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றனர்.
சீடனின் உடல் நடுங்கியது.குருவை பரிதாபத்துடன் பார்த்தான்.
அவர் முகம் சலனமற்று இருந்தது.
"ஒரு அபலையின் வாழ்வை விட என் சத்தியமும், இந்த படிப்பும், துறவறமும் பெரிதல்ல" என்றான் சீடன்.எழுந்தான்.
"உலகை மாற்ற போகிறாய்" என்றார் குரு.
"ஆம்" என்றான் சீடன்.
"உன் மாற்றம் விளைவிக்க இருக்கும் விளைவை பார்" என்றார் குரு.
சீடன் கண் முன் எதிர்கால காட்சிகள் விரிந்தன.அவன் அந்த பெண்ணை காப்பாற்றுகிறான்.அவள் நன்றி கூறி தன் கணவனுடன் செல்கிறாள்.அவளுக்கு பிறக்கும் இரு மகன்கள் வளர்ந்து கொள்ளையராகின்றனர்.சீடனுக்கு பிறக்கவிருக்கும் மகளை கொடூரமாக பலாத்காரம் செய்து அவள் கணவனையும் குழந்தையையும் கொல்கின்றனர்....
பயத்தில் விறுவிறுத்த சீடன் கண்களை திறந்தான்.
"உலகை மாற்றுவதானால் மாற்று" என்றார் குரு.
"காப்பாற்றுங்கள்" என அலறினாள் அந்த பெண்.
தயக்கத்துடன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான் சீடன்.
"அப்பா.நில்லுங்கள்.என்னை காப்பாற்றுங்கள்" என சீடனின் மகள் அலறும் காட்சி கேட்டது.
"குருவே, இதை என்னால் சகிக்க முடியவில்லை" என அலறினான் சீடன்.
"அப்படியானால் காப்பாற்று" என்றார் குரு.
சீடன் மவுனமாக நின்றான்.ரவுடிகள் அவளை பலாத்காரம் செய்து கொலை செய்வதை காண சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டான் சீடன்..அவன் கண்ணில் நீர் வழிந்தது.
அவன் கண்முன் வரும்காலம் விரிந்தது.அந்த பெண்ணின் கணவன் மனைவி இறந்த அதிர்ச்சியில் பைத்தியமாகிறான்.அவன் மகன்கள் இருவரும் அனாதையாகி உணவின்றி இறக்கின்றனர்.சீடனின் மகள் கணவனுடனும் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.
"குருவே ஏன் இந்த துன்பம், ஏன் இந்த துயரம், ஏன் இந்த கொடூரம், ஒருவர் அழிவில்தான் மற்றவர் வாழவேண்டுமா?" என அழுதான் சிஷ்யன்.
"அனைத்தும் உனக்காகத்தான் சீடனே" என்றார் குரு."உலகில் இதுவரை நடந்த அனைத்து கொலை,கொள்ளை,கற்பழிப்பால்தான் நீ இன்று மகிழ்ச்சியாக இருக்கிறாய்...ஆம்,இரண்டாம் உலக யுத்தம் நடக்கவில்லை என்றால் உன் தகப்பன் பர்மாவிலிருந்து சென்னை வந்திருக்கமாட்டார்.அவர் பர்மாவில் பார்த்த பெண்னை மணந்திருந்தால்,அவருக்கு பிறந்த மகன்,அதாவது நீ குருடனாக பிறந்திருப்பாய்"
"என் கண்பார்வைக்கு விலை ஐந்துகோடி உயிர்களா?எனக்கு கண்பார்வை வேண்டாம்" என்றான் சீடன்.
"அப்படியானால் வரலாற்றை மாற்று" என்றார் குரு.
நொடிநேரத்தில் சீடன் 1890 ஆம் ஆண்டின் ஆஸ்த்ரியாவில் ஹிட்லர் சிறுவனாக விளையாடிகொண்டிருந்த காட்டுக்குக்கு போனான்.அதோ இளம் வயது அடால்ப் ஹிட்லர் பாம்பு புற்றில் கைவிட போகிறான்.அருகே சீடன் நிற்கிறான்...
"அவனை நீ தடுக்காவிட்டால் அவன் இறந்துவிடுவான்" என்றார் அசரீரியாக குரு."அப்புறம் உலக போர் நடக்காது. ஆனால் உனக்கு கண்பார்வை போய்விடும்"
சீடனின் உடல் நடுங்கியது.
ஹிட்லர் பாம்புபுற்றில் கை விட்டான்.
"நில், நில்" என அலறினான் சீடன்.
கண் விழித்தான்.கண்பார்வை நன்றாக இருந்தது.
"நீ கத்தியதால் ஐந்து கோடி உயிர்கள் போய்விட்டன.அதில் பலர் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டனர்" என்றார் குரு.
"கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஆனால் எனக்கு கண்பார்வை போயிருந்தால் இன்னமும் வருத்தமாக இருந்திருக்கும்" என்றான் சீடன்.
சீடனும் குருவும் மீண்டும் கானகத்தின் ஊடே நடக்க துவங்கினர்.

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!